மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம் 1948 திசெம்பர் மாதம் 10ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது. அப்பிரகடனம் மேல்வரும் பக்கங்களில் முற்றுமுழுதாகத் தரப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நடவடிக்கையின் பின்னர் சபையானது, பிரகடனத்தை வெளியிடுமாறும், அவ்வாறு வெளியிடப் பெற்றதை "நாடுகள் அல்லது ஆள்பலங்களின் அரசியல் அந்தஸ்துக் காரணமாக எவ்வித வேறுபாடுமில்லாவகையில் எல்லாப் பள்ளிகளிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் பரப்பவும், காட்சிக்கு வைக்கவும், வாசிக்கச் செய்யவும், விளக்கவும்" செயற்படுமாறு அங்கத்துவ நாடுகள் யாவற்றையும் கேட்டுக் கொண்டது. மனிதக் குடும்பத்தினைச் சேர்ந்த யாவரதும் உள்ளார்ந்த மரியாதையையும், அவர்கள் யாவரதும் சமமான, மாற்றத்திற்குட்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, அமைதி என்பவற்றுக்கு அடிப்படையா